
சுகிசிவம்
வடலூர் வள்ளலார் எனும் ஞானஜோதி பற்றிய சம்பவம் ஒன்று சொல்வார்கள். அவர் மண்ணில் ஸ்தூல உடலுடன் வந்தபோதே அவர் மீது பக்தி கொண்ட அன்பர் ஒருவர் வள்ளலாரின் திருமேனியை அப்படியே களிமண்ணால் பொம்மையாகச் செய்து நெருப்பில் சுட்டு, வண்ணம் பூசி அவரிடம் கொண்டு வந்து கொடுத்தாராம். எவரையும் புண்படுத்தவோ அலட்சியப்படுத்தவோ எண்ணாத கருணை மனம் கொண்ட ராமலிங்க வள்ளலோ அந்த பொம்மையை வாங்கி வெகு அலட்சியமாகத் தள்ளி வைத்தாராம்.
அதைக் கண்டு துடித்துப்போனவர் ஏன் சாமீ... அந்த மண் பொம்மையை அலட்சியம் செஞ்சுட்டீங்க என்று வேதனையுடன் கேட்க ‘அப்பா இந்த உடம்பு மண்ணால் தான் பெரும்பாலும் உண்டாகிறது. இந்த மண்ணுடம்பைப் பொன்னுடம்பாக்கும் சாகாக் கலையை உலகுக்கு உரைக்கவே இறைவன் என்னை அனுப்பினான். இதை உணர்ந்து ஆழ்ந்து ஈடுபட்டு இந்த மண்ணுடம்பை பொன்னுடம்பாக்கினேன். நீயோ பொன்னுடம்பை மண்ணுடம்பாக ஆக்கிவந்திருக்கிறாய். பொன் உடம்பாக்கிக் கொள்ளும் இரகசியத்தைக் கற்க எவரும் இல்லையே என்று வருந்தி வரும் வேளையில் நீ பொன்னுடம்பையும் மண்ணுடம்பாக்கினால் நான் எப்படி மகிழ்வேன் என்றாராம்.
யோசிக்க வேண்டிய விஷயம் இது! வள்ளலார் பொன்னுடம்பு பெற்ற இரகசியம் முழுவதையும் நம்மால் விளங்கிக்கொள்ள முடியவில்லை. எனினும் நாடிசுத்தி செய்து உடல் அழுக்கு (கார்பன்) நீக்கி சுவாசத்தை ஏதோ ஓர் அளவில் ஒழுங்கு படுத்துவதன் மூலம் நரை திரை மூப்பு முதலான நோய்களின்றி உடம்பு பொன்னாகிறது என நூற்றுக்கணக்கான சித்தர் பாடல்கள் மூலம் யூகிக்க முடிகிறது. வள்ளலார் உடம்பு பொன்னுடம்பு என்பதை வாரியார் சுவாமிகள் தனது சுய சரிதத்தில் எழுதுகிறார்.
வடலூரில் சக்திய ஞானசபை திருப்பணித் தொடக்கத்தில் ஒருநாள் சத்திய ஞான சபையின் அர்ச்சகர் பாலசுப்பிரமணிய சிவாச்சாரியரின் இல்லத்துக்கு உணவு அருந்தச் சென்றிருந்தேன். பாலசுப்பிரமணிய சிவாச்சாரியர் நேர்மையானவர் வள்ளலாரின் சீடரான சபாபதி சிவாச்சாரியரின் பேரன்.
அவரின் தாயார் நடையில் அமர்ந்திருந்தார் நான் அவரை வணங்கி அவருக்கு அருகில் அமர்ந்தேன். பெரியதம்மா வணக்கம் தாங்கள் ராமலிங்க அடிகளாரைப் பார்த்திருக்கிaர்களா என்று ஆவலுடன் கேட்டேன். அவர் சிரித்தமுகத்துடன் அப்போது எனக்கு ஐந்தரை வயது எங்கள் தாத்தா ஆடூர் சபாபதி சிவாச்சாரியரைக் காண சந்நிதானம் (வள்ளலார்) வருவார் என் தோள்களைப் பிடித்து குட்டிப் பெண்ணே குட்டிப்பெண்ணே என்று கூப்பிட்டுக் கொஞ்சி விளையாடுவார். அப்போது அவரது திருமேனியில் இருந்து பச்சைக் கற்பூர வாசனை வீசும். அவருடைய சிரத்தில் உள்ள முக்காடு விலகும் போது மின்னலைப் போன்ற ஞானஒளி வீசும். அப்போது சந்நிதானம், தலையில் உள்ள முக்காட்டுத் துணியை இழுத்து மறைத்துக் கொள்வார் என்றார். இதைக் கேட்டு அளவற்ற மகிழ்ச்சியும் அதிசயமும் அடைந்தேன்’ என்கிறார்.
பொன்னுடம்பு பெற்ற வள்ளலார். கடவுளை ஆறு வேளை அதாவது சூரியோதயம் உச்சிப் பொழுது சாயரட்சை மாலை, யாமம் மற்றும் வைகறையில் தியானம் செய்ய வேண்டும் என்று உபதேசிக்கிறார். அந்த தியானம் எப்படி அமைய வேண்டும் என்பதை விளக்கும் போது எக்காலத்திலும் புருவ மத்தியின் கண்ணே நமது காரணத்தைச் செலுத்த வேண்டும் என்று தெளிவுபடுத்துகிறார்.
புருவமத்தி என்பது சுழுமுனை நாடி அந்தக் கரணம் அதாவது மனம் புத்தி என்கிற இடது வலது சுவாசங்களை ஒருமுகப்படுத்துவது என்பதன் மூலம் பொன்னுடம்பைப் பெறுவதையே சுட்டுகிறார் என்று கொள்ளலாம். சாகாத்தலை வேகாக்கால் போகாப்புனல் என்ற மூன்று ரகசியக் குறியீடுகளைத் திருவருட்பாவில் பல இடங்களில் அவர் வெளிப்படுத்துகிறார். சாகாத்தலை என்பது இறப்பற்ற பெருநில அதாவது மரணமிலாப் பெருவாழ்வு வேகாக்கால் என்பது காற்று பற்றிய இரகசியம் (கால் என்பது காற்றைக் குறிக்கும் சொல்), வெந்து அழியாத பிராணயவாயுவே வேகாக்கால் தீய்த்துக் கெடுக்கப் படாத பிராணனாகிய காற்று - உடம்பு முதிர்ந்து வாடிக் கெடாதபடி பிராணனை அடக்கும் வித்தைதனை அறிந்தால் மரணம் இல்லை என்கிறார்.
சாகாக்கல்வி என்பதை நமக்குக் கொட்டித் தந்தவர்கள் தமிழகத்துச் சித்தர்கள் அவர்கள் சொன்ன வழிமுறைகளை எல்லாம் சுருக்கிச்சொன்னால் மூன்று வழிகள் கிடைக்கின்றன. ஒன்று இரசவாத முறை அடுத்தது குண்டலினி யோகம், மூன்றாவது உலடா சாதனை எனும் தலை கீழ்ப் பயிற்சி முறை எனும் மறித்தேற்றும் முறை எனப் பட்டியலிடுகிறார் பேராசிரியர் டி. என். கணபதி.
பாதரசம், கந்தகம் காக்கைப் பொன் என்கிற மைக்கா ஆகிய வேதிப் பொருட்களைப் பயன் படுத்தி இரசாயன யுக்திகளால் (கெமிக்கல்) சாவா நிலைக்கு முயற்சி செய்துள்ளனர். குண்டலினி யோகத்தில் முன்சொன்ன வேதிப்பொருட்களுக்கு பதிலாக நம்முடைய உடலில் தலையில் சகஸ்ராரத்தில் ஊறிவரும் உயிர்ச்சாறு பருகுவது விளக்கப்படுகிறது. இதனை மெய்யாகம் என்கிறார் திருமூலர்.
தமிழ்ச் சித்தர் மரபு என்கிற நூலில் பேராசிரியர் டி. என். கணபதி அழகாக இது குறித்து விளக்குகிறார். ஓர் இரும்புத் துண்டை நீரில் போட்டால், அது மூழ்கிவிடுகிறது. ஆனால் அதே இரும்புத் துண்டைக் கொண்டு, படகு செய்து நீரில் மிதக்க விட முடிகிறது. கடலைக் கடக்க உதவுகிறது. அதேபோல் பிண்ட நிலையில் ஒரு கரையில் இருக்கும் ஆன்மாவை மறுகரையில் அண்ட நிலையில் இருக்கும் பரமான்மாவுடன் இணைக்கிற படகாக இந்த உடம்பு பயன்படுகிறது. மூழ்கும் இரும்பை மூழ்காத படகாக்குவது போல் அழியும் உடம்பை அழியா உடம்பாக்கும் விந்தையே குண்டலினி யோகம்.
அடுத்து மறித்தேற்றம் முறை சித்தர்களால் சித்தர்களுக்கு மட்டுமே புலப்படுத்தப்படும் இரகசியம் இது விந்துவை மறித்து மேலேற்றும் முறை இந்த உல்டா சாதனையை நாத சித்தர்கள் பயில்கிறார்கள். இந்த உயரத்துக்கெல்லாம் பாயாவிடினும் காற்றைக் கையாளும் கலையை அறிந்தால் வலுவான பொலிவான உடலும் உள்ளமும் ஆன்மாவும் நம் வசமாவது உறுதி வள்ளலார் சாகாத்தலை வேகாக் கால் என்கிறார்.
வேறு சில சித்தர்களோ சிறிது மாற்றி சாகாக்கல் வேகாத் தலை என்கின்றனர் சாகாக்கால் என்று பிராணாயாமத்தையே பேசுகின்றனர். வேகாத்தலை என்பது சகஸ்ராரமாகிய தலையில் ஊறும் அமிழ்தைக் குறிக்கிறது. ஆக கால், தலை ஆகிய இந்த இரண்டும் நமக்குப் புரிபடாததால், ‘தலைகால் தெரியாமல் ஆடுகிறான்’ என்று ஜாடை பேசினர்.
இதேபோல், விட்டகுறை தொட்ட குறை என்கிற பரிபாஷை மூச்சை நாசிவழி விட்ட குறை என்றும் நடுவில் மறித்து ஏற்றி சுழுமுனையில் பாயவிடுவதே தொட்ட குறை என்றும் பொருளாகிறது என தமிழ்ச் சித்தர் மரபு நூல் விளக்குகிறது.
சிவசாக்கியர் எனும் சித்தர் கிராமத்து உதாரணம் ஒன்றின் மூலம், ‘அடேய் நீ காதலித்துக் கல்யாணம் செய்த உன் மனைவியை ஒரு ரவுடி கண் வைத்து அவளை என்னிடம் அனுப்பு என்றால், நீயே கொண்டு போய் அவனிடம் சேர்ப்பாயா? வெட்டிவிடுவேன் என்று புறப்படுவாய் அல்லவா! அதேபோல், நாம் ஆசை ஆசையாக வளர்த்த இந்த உடம்பை அந்த எமன் கண்வைத்து ஓலைவிட்டதும் மயானம் வரை கொண்டு போய்ப் போடலாமா? முட்டாள் காலனைக் கபZகரம் பண்ண வேண்டாமா? என்கிறார்.
வடிவு கண்டு கொண்ட பெண்ணை
வேறொருவன் நத்தினால் விடுவனோ
அவனை முன்னர் வெட்ட வேண்டும் என்பனே
நடுவன் வந்து அழைத்த போது நாறும் இந்த நல்லுடல்
சுடலைமட்டும் கொண்டு போய்த் தோட்டிகைக் கொடுப்பரே’
என்ன அழகான உவமை? ஆனால் அதைத் தடுப்பது எப்படி எனும் கேள்வி வரும் இப்படிக் கேட்பவருக்குத் திருமூலர் பதில் சொல்கிறார். ‘காற்றைப் பிடித்த தால் கூற்றை (எமனை) உதைக்கலாம்!
No comments:
Post a Comment