


“என்னடா இது! மனிதனாவது பறப்பதாவது! எல்லாம் சுத்த ஏமாற்றுவேலை!” என்கிறீர்களா…, பொறுங்கள், அவசரப்படாதீர்கள். கீழ்கண்ட பத்தியை முதலில் படியுங்கள்…
“சென்னைக் கோமளீசுவரன் பேட்டையில் ஓர் அம்மையார் இருந்தார். அவர் காலஞ்சென்ற டாக்டர் நஞ்சுண்டராவின் குரு என்று உலகம் சொல்லும். அவ்வம்மையார் பறவையைப் போல வானத்தில் பறப்பர். ஒருமுறை யான் வசித்த கல்லூரியின் மேல்மாடியில் பறந்துவந்து நின்றனர். மானுடம் பறக்கிறதெனில் உலகம் அதை எப்படி வியக்குமென்று சொல்ல வேண்டுவதில்லை. அக்காலத்தில் சென்னையில் வதிந்த விஞ்ஞானியர் பலர் சூழ்ந்து சூழ்ந்து அம்மையார் நிலையை ஆராய்வர். அப்பொழுது சென்னை மியூஸியத் தலைவராயிருந்த ஓர் ஐரோப்பியரால் பறவையார் நிலை பெரிதும் ஆராயப்பட்டது. அம்மையார் பறவை இனத்தைச் சேர்ந்தவரென்றும், அவரிடம் பறவைக்குரிய கருவி கரண அமைப்புகள் சில உள்ளன என்றும், கூர்தல் (Evolution) அறப்படி அத்தகையப் பிறவி இயற்கையில் அமைதல் கூடும் என்றும் அவரால் விளக்கப்பட்டன. அவர் விளக்கம் மற்றவரால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. யான் ‘தேசபக்தன்’ ஆசிரியனாகியபோது டாக்டர் நஞ்சுண்டராவிடம் நெருங்கிப் பழகுதல் நேர்ந்தது. பறவையாரைப் பற்றி அவரை நான் விசாரித்தேன். அவர், ‘அம்மையார் சித்தரினத்தில் சேர்ந்தவர்’ என்று கூறினர். பறவை நாயகியார் நிலை மனோதத்துவத்துக்கு எட்டுவதா? உன்னிப் பாருங்கள்.”
இதைச் சொன்னது யார் தெரியுமா?
பொய்யாமையை தனது வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்த, சிறந்த பத்திரிகை ஆசிரியராகவும், எழுத்தாளாரகவும் திகழ்ந்த, தொழிலாளர் நலனுக்காக உழைத்த, முதன் முதலில் தொழிலாளர்களுக்காக என்று சங்கம் கண்ட, இலக்கியவாதி, ஆன்மிகவாதி என்று பன்முகங்கள் கொண்ட, ஈவெ.ராவின் நெருங்கிய நண்பராகத் திகழ்ந்த….
”தமிழ்த் தென்றல்” திரு.வி.க. அவர்கள்தான்.
அவர் அம்மையார் பறப்பதைக் கண்ணால் கண்டு, உறுதிப்படுத்தி தனது ‘உள்ளொளி’ என்ற நூலில் இது பற்றி விரிவாகப் பதிவு செய்திருக்கிறார். (பக்கம் 57, மணிவாசகர் பதிப்பகம். தமிழ் மண் பதிப்பகமும் அவரது நூல் தொகுப்பை வெளியிட்டுள்ளது)
அம்மாவின் வரலாற்றை பின்னர் ஒரு சமயம் விரிவாக எழுதுகிறேன். ஸ்ரீ சர்க்கரை அம்மாவின் ஆலயம் திருவான்மியூரில், கலாஷேத்ரா சாலையில், பாம்பன் சுவாமிகள் சமாதி ஆலயத்திற்குச் செல்லும் வழியில் அமைந்துள்ளது.
அதனை நிர்மாணித்தவர் சுவாமி விவேகானந்தரின் அன்புக்குப் பாத்திரமான, பாரதியாரின் நண்பரான டாக்டர் சி. நஞ்சுண்ட ராவ். இவர் அம்மாவின் முதன்மைச் சீடர். அக்காலத்தில் மிகப் பிரபலமான மருத்துவர்.
No comments:
Post a Comment