நாக தோசம் என்பது நவக்கிரக கோள்களில் சாயா கிரகங்கள் எனப்படும் ராகு/கேது ஆகியவைகளால் ஏற்படுவதாகும். ராகு கேது ஆகிய இவ்விருவரும் அசுப கிரகங்கள். இவர்கள் சூரியன், செவ்வாய், சனி ஆகிய இயற்கையான அசுப கிரகங்களைக் காட்டிலும் அதிக தீமை பயப்பவர்கள். இவர்களுக்கு பனிரண்டு ராசிகளில், தமக்கென உரிய ராசி என்று ஏதும் இல்லையென்றாலும், தாம் சஞ்சரிக்கும் ராசியை தமதாக்கி, அந்தப் பாவத்திற்குரிய நற்பலன்களை நலிவடையச் செய்யும் ஆற்றல் படைத்தவர்கள் மட்டுமல்லாமல் அந்த பாவத்திற்குரிய பொறுப்பையும் ஏற்று செயல்படும் வலிமை பெற்றவர்கள். அந்தப் பாவப்பலனை சாதகர் பரிபூரணமாக அடையச் செய்யாமல் தட்டிப் பரித்து சந்தோசம் காண்பவர்கள். நவக்கிரகத்துத் தலையாய நாயகர்களாகிய சூரியன் மற்றும் சந்திரன் இவர்களுக்கு எதிரிகளாவதோடு, ஒளிதரும் அவர்களைத் தனது நிழலால் மறைத்து கிரகண தோசத்தை உண்டாக்கி உலகை இருளடையச் செய்யும் வல்லமைப் பெற்றவர்கள். இவர்கள் மற்ற கிரகங்களைப் போல் வலமாகச் சுற்றாமல் இடமாக சுற்றுவதோடு, எப்போதும் 7க்கு 7ஆக அமைந்து இயங்குபவர்கள். அதனால் தான் பெரியவர்கள் நாகத்தைப் பார்த்து யோகத்தைச் சொல்ல வேண்டுமென்று குறிப்பிடுவார்கள். இதைப் போல வல்லமைப் படைத்த அசுபகிரகமான அங்காரக பகவான் ஒருவர் சாதகத்தில் 2,4,7,8,12 ஆகிய இடங்களில் இருந்தால் அங்காரக தோசம் உடையவர்கள் என்று சொல்லப்படுகிறது.
பொதுவாக நாக தோசங்களில் மிகச் சிறப்பாக குறிப்பிடப்படுவது காள சர்ப்ப யோகதோசம். ஒருவர் பிறக்கும்போது கணிக்கப்படும் ராசி கட்டத்தில் ராகு-கேது ஆகியவர்களுக்கு இடையே மற்ற 7 கிரகங்கள் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய கிரகங்கள் சஞ்சரிப்பதையே கடுமையான காள சர்ப்ப யோக தோசங்கள் என்று குறிப்பிடப்படுகிறது. சாதகத்தில் ராசிக் கட்டத்தில் கீழ்கண்டவாறு ராகு - கேதுக்கள் இருப்பதை காள சர்ப்ப யோக தோசங்கள் எனப்படும்.
ராகு, கேது இருக்கும் இடம்
ராகு 1 7 2 8 3 9 4 10 5 11 6 12
கேது 7 1 8 2 9 3 10 4 11 5 12 6
மேற்குறிப்பிட்டபடி சாதகம் அமையப் பெற்றவர்கள் வறுமை, துன்பம், வியாதி, தொழில் இழப்பு, பகை, அரக்கசுபாவம், திருமணத்தடை, புத்திர தோசம் முதலான துன்பங்கள் அனுபவிக்க வேண்டியுள்ளது. எங்கு சென்றால் துன்பங்கள் நீங்கி முக்தி பெற முடியும் என்று வழித் தெரியாமல் பலர் தவிக்கின்றனர். சாதகம் கணிக்காவிட்டாலும் மேற்படித் துன்பங்களை பலர் அனுபவித்து வருகின்றனர். இதற்கு ஒரே வழி இறைவனை முறையாக வழிப்பட்டால்தான், துன்பங்களிலிருந்து விடுதலைப் பெற முடியும்.
No comments:
Post a Comment